கொலைச்சேவல் – விமர்சனம் 2.5/5

இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கலையரசன் மற்றும் தீபா பாலு காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். தீபா பாலு தனது பெற்றோரை எதிர்த்து கலையரசனை திருமணம் செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கலையரசனின் கிராமத்திற்கு வருகிறார் தீபா பாலு.

கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவை, தனது குலதெய்வக் கோயிலில் படையல் வைக்க அழைத்துச் செல்ல கலையரசன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். கலையரசனின் அக்கா, மாமா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு செல்ல தயாராகின்றனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் முதலில் கோவிலுக்கு செல்கின்றனர். பின்னர் கலையரசனும் தீபா பாலும் இருசக்கர வாகனத்தில் அந்த கோவிலுக்குச் செல்கிறார்கள். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த கோவிலுக்குள் அனைவரும் சென்ற பின், அங்கு ஒரு மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது.

அந்த சம்பவம் என்ன? ஏன் அது நடந்தது? என்பதற்கான பதிலை இயக்குனர் இரண்டாம் பாதி கிளைமாக்ஸில் வெளிப்படுத்துகிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவெளி வரை கதை பெரும்பாலும் ஒரே இடத்தில் நகர்கிறது. இரண்டாம் பாதியின் பாதிக்கு மேல் தான் கதையின் உண்மையான சாராம்சத்தை பார்வையாளர்களிடம் எடுத்துக் கூற முயற்சிக்கிறார் இயக்குனர்.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கும்போது, அதில் இருக்கும் உணர்வுகளையும் உண்மையையும் உயிரோட்டத்துடன் காட்டுவது இயக்குனரின் திறமை. அதே நேரத்தில் எதை சொல்ல வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு காட்சிப்படுத்துவது தான் ஒரு நல்ல படைப்பாளியின் சிறப்பு.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் காட்சி பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றுகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக இயக்குனர் விளக்கம் அளித்தாலும், அதை எப்படி சமூகத்திற்கு பயனுள்ள கோணத்தில் சொல்லலாம் என்பதில் இன்னும் சிந்திக்கலாம்.

ஆணவக் கொலை (Honor Killing) போன்ற விஷயத்தை மையமாக வைத்து இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்கு இப்படியான கொடுமை நடந்ததால், பின்னர் அந்த பெண்ணை சாமியாக வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, அதே சாமியை கும்பிட வரும் இன்னொரு பெண்ணுக்கும் அதே கொடுமை நடக்கிறது என்றால், அந்த சாமியை ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வி காரணமாக படத்தின் மொத்த கருத்து ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது.

இப்படிப்பட்ட சினிமா சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், அது பார்வையாளர்களின் மனநிலையை எப்படி பாதிக்கும் என்பதையும் நினைத்தால் ஒரு அச்சம் தோன்றுகிறது.

தீபா பாலுவின் அழகும் நடிப்பும் இந்த படத்தின் பலமாக இருக்கிறது. கலையரசனின் நடிப்பும் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. ஆனால் இருவரும் இந்த கதையைத் தேர்வு செய்ததில் சற்று கூடுதல் சிந்தனை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

துதிவானன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் :கொலை சேவல்”. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பிஜி முத்தையா.

இசையமைத்திருக்கிறார் சாந்தன். படத்தொகுப்பு செய்திருக்கிறார் அஜய் மனோஜ். ஆர்பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இருவரும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்