தனியார் பள்ளியில் பிடி ஆசிரியராக பணியாற்றும் கிஷோர், அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சுபத்ராவை மணந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கிஷோருக்கு டிவி பாடல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க, அதனால் அவர் அடிக்கடி போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலமாகிறார். ஆனால் இதன் காரணமாக பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை எடுக்க, இறுதியில் தனது வேலையையும் இழக்கிறார். அதன் பின்னர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் அவர்களை எந்த நிலைக்கு தள்ளுகின்றன என்பதே படத்தின் மையக் கதை.
இதுவரை வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த கிஷோர் குமார், இப்படத்தில் முழுநீள நாயகனாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். படம் முழுவதும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து, ஒரே இடத்திலும் தளராமல் தனது நடிப்பை கொண்டு சென்றிருக்கிறார். மனைவியாக நடித்த சுபத்ராவும் தன்னிடம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார்.
குழந்தை நடிகர்கள், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்துள்ளனர். வழக்கமான பாதையிலிருந்து விலகிய ஒரு கதையாக இந்த படம் உருவாகியுள்ளதாலும், ரசிகர்களை இது எவ்வளவு ஈர்க்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
மெல்லிசை விரும்புபவர்களுக்கு இசை ஒரு இனிய அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.
இயக்கம் & தயாரிப்பு : திரவ்
நடிகர்கள்: கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்
இசை : சங்கர் ரங்கராஜன்
ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி
மெல்லிசை – மனதை வருடி

