க்ராணி – திரை விமர்சனம் 3.5/5

தமிழக–கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமமே படத்தின் கதைக்களம். அங்கு 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி திலீபன் கிராமத்துக்கு வருகிறார்.

அதே நேரத்தில், லண்டனில் இருந்து குடும்பத்துடன் பூர்வீக வீட்டிற்கு குடியேறும் ஆனந்த் நாக், வீட்டின் முன் மயங்கி கிடந்த ஒரு மூதாட்டிக்கு உதவி செய்கிறார். அந்த மூதாட்டியைப் பற்றி ஊர் தலைவர் சொல்லும் பயங்கரமான கதை, ஆனந்த் நாக்கை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் அவரது மனைவி அபர்ணா இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரிக்க, உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றன.

மூதாட்டியைப் பற்றிய தகவலை அறிந்த திலீபனும் அந்த வீட்டிற்கு வருகிறார். அதன் பின் நடைபெறும் சம்பவங்களே படத்தின் மையக் கதை.

மூதாட்டியாக வடிவுக்கரசி மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி படத்தின் மையமாக நிற்கிறார். ஆரம்பத்தில் இரக்கம் ஏற்படுத்தும் அவரது பாத்திரம், போகப் போக பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறுகிறது. அவரது அனுபவம் நிறைந்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

திலீபன், சிங்கம் புலி, கஜராஜ், ஆனந்த் நாக், அபர்ணா மற்றும் குழந்தை நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். இயக்குனர் விஜயகுமாரன் நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை பெற்றுள்ளார். ஒளிப்பதிவாளர் ஏ. மணிகண்டனின் இரவு நேர காட்சிகள் மற்றும் டாக்டர் செல்லையா பாண்டியனின் மிரட்டலான பின்னணி இசை படத்திற்கு வலுவூட்டுகின்றன.

பழைய கிராமக் கதைகளின் சுவையுடன் சொல்லப்படும் இந்த படம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு திரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர்கள்: வடிவுக்கரசி, திலீபன், சிங்கம்புலி, கஜராஜ், ஆனந்த் நாக், அபர்ணா, மாஸ்டர் ஞானஷ்யாம், பாப்வ் சாண்ட்ரியா

தயாரிப்பு: விஜய் மேரி யூனிவர்சல் மீடியா

தயாரிப்பாளர்: விஜயமேரி

எழுத்து & இயக்கம்: விஜய குமரன்

ஒளிப்பதிவு: ஏ மணிகண்டன்

இசையமைப்பாளர்: டாக்டர் செல்லையா பாண்டியன்

படத்தொகுப்பு: எம் எஸ் கோபி