இந்த வேடுவன் தொடரில் பிரபல நடிகராகவே வருகிறார் கண்ணா ரவி. இவர் நடித்து வெளிவந்த ஒரு படம் படுதோல்வியை சந்திக்கிறது. கண்ணா ரவி கதைக்குள் தலையிடுவது தான் தோல்விக்குக் காரணம் என்று சினிமா ரசிகர்கள் பலரும் இவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில், இவரிடம் புதிய படத்தின் கதையை கூறுவதற்காக ஒருவர் வருகிறார். அந்த கதையில் கண்ணா ரவி அண்டர் கவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள், இது உண்மையாக நடந்த சம்பவம் என்றும் கூறுகிறார். மேலும், அப்படத்தின் ஒரு வரி பிடித்துப் போக கண்ணா ரவியும் ஒப்புக் கொள்கிறார்.
படப்பிடிப்பு துவங்குகிறது. இவரது கதாபாத்திரத்திற்கு மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். பிரபல ரவுடியை மாறுவேடத்தில் பல மாதங்களாக தொடர் கண்காணிப்பில் சமயம் பார்த்து என்கௌண்டர் செய்கிறார். இவர் அண்டர் கவர் போலீஸாக இருப்பது இவரது மனைவிக்கும், போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
இந்நிலையில், போலீஸ் உயரதிகாரி அடுத்தப் பணி ஒன்றை கண்ணா ரவியிடம் கொடுக்கிறார். அது சிறுவயதில், பல கொலைகளை செய்து பெரிய ரவுடியான பிறகு, ஊர் மக்கள் அனைவராலும் மரியாதைக்குரியவராக தன்னை மாற்றிக் கொண்ட சஞ்சீவை தான் இவர் என்கெளண்டர் செய்யும் படி பணி ஒப்படைக்கப்படுகிறது.
அதனை ஏற்று, சஞ்சீவ் இருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் கண்ணா ரவி. அங்கிருக்கும் ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பது போல், சஞ்சீவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஒரு சில நாட்கள் கழித்து தனது முன்னாள் காதலியான வினுஷா தேவியின் கணவர் தான் சஞ்சய் என்று கண்ணா ரவிக்கு தெரிய வருகிறது.
அதன்பிறகு, கண்ணா ரவி எடுத்த முடிவு என்ன? இந்த கதையால் ஹீரோ கண்ணா ரவி என்ன மனநிலைக்குச் சென்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மீதமிருக்கும் தொடரில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர் பவன்.
சூரஜ் என்ற கதாபாத்திரத்திலும், அண்டர் கவர் போலீஸ் கதாபாத்திரத்திலும் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கண்ணா ரவி. பிச்சைக்காரனாக நடித்திருந்த காட்சிகளில் தன்னை முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார், பாராட்டுகள்.
தனது மனைவியிடம் காதலை வெளிப்படுத்தும் போதும், தான் கொல்ல வந்த ரவுடி தான் தன் முன்னாள் காதலியின் கணவன் என்றறிந்து உணர்ச்சியை வெளிப்படுத்தும் இடம், சஞ்சீவ் மற்றும் கண்ணன் ரவி இருவருக்குமான உரையாடல் என பல இடங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் கண்ணா ரவி.
நடை, உடை, பார்வை மற்றும் பேசும் வசனத்தில் என தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சஞ்சீவ். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வினுஷா தேவியின் தனது கண்களால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மேலும், தொடரில் நடித்திருந்த ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, லாவன்யா, ரேகா நாயர், பார்வதி, மற்றும் ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தொடர் ஆரம்பித்தது முதல் இறுதி வரையிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் குறையாமல் திரைக்கதையை நகர்த்தி நம்மை சீட்டின் நுனியிலே அமர வைத்துவிட்டார் இயக்குனர் பவண்.
இதற்கு முன் இப்படியான அண்டர்கவர் போலீஸ் கதாபாத்திரங்கள் பற்றி பல படங்கள் வந்தாலும், இத்தொடர் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு தனித்தன்மையுடன் இருக்கிறது. தொடருக்கு தொடர் ட்விஸ்ட் காட்சிகளை வைத்து, தொடரை விறுவிறுப்பாகவே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். சஞ்சீவ் கதாபாத்திரத்தை மட்டும் சற்று தெளிவாக எழுதியிருக்கலாம். தொடருக்கான தீம் பி ஜி எம் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஸ்ரீநிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை கண்களுக்குள் அழகாக கடத்தியிருக்கிறது.
பவன் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் தான் இந்த “வேடுவன்”. ஜீ5 தளத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இந்த தொடரில், கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவன்யா, ரேகா நாயர், பார்வதி, மற்றும் ஜீவா ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஸ்ரீநிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இந்த தொடரை தயாரித்திருக்கிறார்.
வேடுவன் – தனித்தன்மையானவன்