கன்னியாஸ்திரி சாய் ஸ்ரீ, 5 வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்கு தனது உறவு முறை தங்கை சிது குமரேசன் வீட்டிற்கு வருகிறார். அவர், தங்கை சிது குமரேசன் மற்றும் விக்னேஷ் ரவியுடன் லிவ்வின் முறையில் வசித்து வருகிறார். இவர்களுடன் சேர்த்து, அங்கு மற்றொரு ஜோடியும் லிவ்வின் முறையில் இருக்கிறார்கள். சாய் ஸ்ரீ தனி அறையில் தங்க வைக்கப்படுகிறார்.
பைபிள் படித்துக் கொண்டு, ஜபம் செய்து கொண்டிருக்கும் சாய் ஸ்ரீ இரண்டாவது நாள் முதல் அவரிடம் மாற்றம் தெரிகிறது. கன்னியாஸ்திரி உடையை மாற்றி சுடிதார் அணியத் துவங்குகிறார். அதுமட்டுமல்லாமல், அவர் மற்ற பெண்களைப் போல் குடும்ப பெண்ணாக தனது இளமையை தொலைத்து விடக்கூடாது என்று கன்னியாஸ்திரி வாழ்க்கையிலிருந்து வெளியே வரத் துடிக்கிறார்.
இதனை தனது அம்மாவிடம் கூறுகிறார். ஆனால், அவரோ சாய் ஸ்ரீ’யை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அதன் பிறகு சாய் ஸ்ரீ ஒரு வித்தியாசமான முடிவை எடுக்கத் துணிகிறார்.
இதன்பிறகு சாய் ஸ்ரீயின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகி சாய் ஸ்ரீ தனது மரியா என்ற கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார். அதுவும் படத்தின் முதல் பாதியில் கண்களாலும், உணர்ச்சிப்பூர்வமாகவும் காட்சிகளை சிறப்பாக நடத்துகிறார்.
உணர்வுகளை நச்சென்று வெளிப்படுத்தும் விதம் அருமை. சாய் ஸ்ரீயின் தங்கையாக நடித்திருந்த சிது குமரேசனும் பல காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கோபத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் காட்சியில் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
யாருப்பா நீ, இப்படி ஒரு கதாபாத்திரத்தை இவ்வளவு சாதாரணமா நடிச்சிட்டு போய்ட்டே இருக்க? என்று கேட்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார் பாவல் நவகீதன். மிக நீளமான வசனத்தை அசால்ட்டாக பேசியிருக்கிறார்.
காட்சிகளை விளக்கமாக கூறியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
மதத்தை பற்றியும், அதன் உணர்வைப் பற்றியும் சினிமாவில் கூறுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் சில நேரங்களில் தவறாக போய்விடுகிறது.
எவ்வித ஆசையும், பாசத்திற்கும் வாழ்க்கையில் இடமில்லையென்று முடிவு செய்து கொண்டு சில பெண்கள் கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் காயப்படுத்துவது போல் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கத்திலும், திரைக்கதையிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டு, கதையில் கவனத்தை சிதறியிருக்கிறார்..
ஆனால், இறுதிக் காட்சியின் இசை காதுகளில் கடற்கரை அலையோசை மாதிரி ஓயாமல் ஒலித்தக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது.
நடிகர்கள்: சாய் ஸ்ரீ பிரபாகரன், பாவல் நவகீதன், சிது குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா
எழுத்து & இயக்கம்: ஹரி கே சுதன்
தயாரிப்பாளர்: ஹரி கே ஹரசுதன்
ஒளிப்பதிவு: மணி சங்கர்
படத்தொகுப்பு: காமேஷ் & நிஷார் ஷெரீப்
இசை: அரவிந்த் கோபால கிருஷ்ணன் & பரத் சுதர்ஷன்
மரியா – சுதன் சுதாரித்திருக்கலாம்