இட்லி கடை – திரை விமர்சனம் 4/5

ராஜ்கிரண் தேனி அருகே ஒரு அழகிய கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கிறார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கிறார் கீதா கைலாசம். இவரும் ராஜ்கிரணுக்கு இட்லி கடையில் உதவியாக இருக்கிறார். இவர்களுக்கு மகனாக தனுஷ் மகிழ்ச்சியாக வளர்கிறார். சிவனேசன் இட்லி கடை தான் அந்த ஊருக்கு அடையாளம். ராஜ்கிரண் வருமானத்தை விட தன் கடைக்கு விரும்பி வந்து ரசித்து ருசித்து சாப்பிடுபவர்களையே பெரிதும் விரும்புகிறார். படிக்கும் குழந்தைக்கு காசு வேண்டாம் என்று கூறுகிறார் ராஜ்கிரண். இதுபோல இன்னும் பல நல்ல கருத்துகளோடு வாழ்வதால் அந்த ஊரில் ராஜ்கிரண் மீது அனைவருக்கும் மரியாதை அதிகமாகிறது.

கேட்டரிங் படித்துவிட்டு சென்னையிலிருந்து பாங்காங் செல்கிறார் தனுஷ். அங்கு சத்யராஜிடம் பணிபுரிகிறார். சத்யராஜ் எப்போதும் தனுஷை தன் மகனான அருண் விஜயுடன் இணைத்து புகழ்ந்து பேசுகிறார். இதனால், மிகப் பெரிய கோடீஸ்வரனின் மகனான அருண் விஜய்க்கு தனுஷ் மீது ஈகோ வருகிறது.

இந்நிலையில், சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். சத்யராஜும் மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே, இன்னும் 10 நாட்களில் திருமணம் என்ற நிலையில் ராஜ்கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. தனுஷ் தனது தந்தையின் இறுதி சடங்கை முடித்த அடுத்த நாள் அவரது அம்மாவான கீதா கைலாசமும் இறந்துவிடுகிறார்.

ஒரே நேரத்தில் அப்பா, அம்மாவை இழந்து வாடும் தனுஷுக்கு சிறு வயது தோழியான நித்யா மேனன் ஆதரவாக இருக்கிறார். ஒரு தலையாக தனுஷை காதலிக்கிறார்.

இதற்கு மேல் நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன். என் அப்பாவுடைய இட்லி கடையை நானே எடுத்து நடத்துவேன் என்று முடிவெடுக்கிறார். ஷாலினி பாண்டே கட்டாயப்படுத்தியும் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் தனுஷ். இதனால் ஏற்கனவே இருக்கும் ஈகோவோடு இன்னும் ஆத்திரமடைகிறார் அருண் விஜய்.

இன்னொருபுறம் இட்லி கடைக்கு போட்டியாக பரோட்டா கடை வைத்திருக்கும் சமுத்திரக்கனியும் இட்லி கடையை அழிக்கவும், தனுஷ் மீது கோபமும் கொள்கிறார்.

இறுதியாக, இட்லி கடை என்ன ஆனது? தனுஷ் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? அருண் விஜய், தனுஅ டிடி0என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் பாதி கிராமம், நகரம், வெளிநாடு என அடுத்தடுத்த காட்சிகள் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுக்க கிராமத்திலேயே கதை நடக்கிறது. ஆகையால், கிராமத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை ரிதமாக செல்கிறது.

தனுஷ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார். இந்த படத்திலும் முருகனாகவே வாழ்ந்திருக்கிறார். பெற்றோரை நினைத்து வெளியூரில் ஏங்கும் போது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இட்லி கடையில் உரலில் மாவு ஆட்டும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

நடிப்பு அரக்கியான நித்யா மேனன் கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். தனுஷின் மீதான காதலை சிறு சிறு அழகிய முகபாவனைகளால் ரசிக்க வைக்கிறார். ஒரு கிராமத்து பெண் தன்னுடைய காதலை எப்படி வெளிப்படுத்துவாரோ, அதை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

ஷாலினி பாண்டே க்யூட்டான கோடீஸ்வர வீட்டு பெண்ணாகவும், தனுஷை காதலிக்கும் போதும் மிகவும் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனாக நடித்து வரும் அருண் விஜய் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து ஒப்புக் கொண்டிருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று தோணும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோடீஸ்வர வீட்டு மகன் என்ற தோரணையும், சாதாரண கிராமத்தில் இருந்து இட்லி கடை வைத்திருக்கும் மகனுடனா என்னை இணைத்து பேசுவது என்ற ஈகோவும் அவர் முகம் முதல் உடல் மொழி அனைத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனுஷை ஜெயிக்க வேண்டுமென்ற ஈகோவை வெளிக்காட்டும் போது பார்வையாளர்கள் கோவம் கொண்டு நான்கு அறை விடலாம் என்று தோன்றும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இறுதிவரையும் அதை விட்டுக் கொடுக்காமல் இருந்ததே அவர் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருக்கிறது.

சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனிக்கு இன்னும் சில காட்சிகள் கொடுத்திருக்கலாம். இளவரசு வழக்கம்போல் சிரத்தையுடன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இளவரசுக்கு வயது குறைந்தது போல் இளமையாக காட்சியளிக்கிறார்.

இப்படத்தை தனுஷ் எழுதி இயக்கி, மீண்டும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்திருக்கிறார். பெற்றோரை எப்போதும் கைவிடக் கூடாது என்ற ஆழமான கருத்தை பதிவு செய்ததற்கு பாராட்டுகள்.

ஜி.வி.யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கிறது. கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது.

இட்லி கடை – அறுசுவை விருந்து