தர்ஷன் ப்ரியனும் சார்மி விஜயலக்ஷ்மியும் கல்லூரி காதலர்கள். சார்மியின் தந்தை மிகப்பெரும் கோடீஸ்வரர். ஒரே மகள் என்பதால், அதிகமான செல்லம் கொடுத்து மகளை வளர்க்கிறார். சார்மியின் தாய்மாமன் மனோஜ், சார்மியின் மொத்த சொத்தையும் அடைவதற்கு ஒரே வழி அவரைத் திருமணம் செய்து கொள்வதுதான். ஆகையால், சார்மியை திருமணம் செய்ய நினைக்கிறார். இந்நிலையில் சார்மி தர்ஷனை காதலிப்பது மனோஜுக்கு தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், தர்ஷனைட அடித்து ஆற்றில் வீசி விடுகிறார். தர்ஷன் இறந்துவிட்டதாக நினைத்து சார்மி தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார்.
ஆனால், தர்ஷனை அவரது நண்பர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். சார்மியின் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு சமயம் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க நேர்கிறது. பின்பு இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் நம்மை கொன்று விடுவார்கள் என்று இருவரும் சேர்ந்து, விபரீத முடிவு ஒன்றை எடுக்கின்றனர்.
அதற்கு பின், அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் தர்ஷன், கதைக்கேற்ற நாயகனாக மிளிர்கிறார். அதுவும், இந்த மாதிரி துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு நிச்சயமாக நடிகர் தர்ஷனை பெரிதாக பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடம் நிச்சயம் காத்துக் கொண்டிருக்கிறது.
நாயகியான சார்மி விஜயலக்ஷ்மி, அழகான தேவதையாக வலம் வருகிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் இவருக்கான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். மேலும், மலைச்சாமி, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், பாய்ஸ் ராஜன் உள்ளிட்ட அனைவருமே படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
வில்லனாக வந்த மனோஜ், படத்திற்கு சரியான தேர்வு தான் என்றாலும், படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் கண்ணாடி அணிந்து கொண்டு வந்திருப்பதால் அவருடைய நடிப்பை பார்க்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு நடிகன் தனது நடிப்பை கண்களின் வழியாகத் தான காட்ட முடியும். அப்படிப்பட்ட வாய்ப்பை கண்ணாடி அணிந்து தவறவிட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
படத்தின் கதையை மிகவும் தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக இயக்குனர் உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. சமூகத்தில் நடக்கும் ஒரு சில அவலநிலைக்கு, வாழ வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்று துணிந்து எடுக்கும் முடிவு பாராட்டுதலுக்குரியது. இருப்பினும் ஒரு சில காட்சிகள் நாடகத் தன்மையாக இருப்பதால் சலித்துவிடுகிறது.
ஒருசில குறைகள் இருந்தாலும் தனித்துவமான கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனரையும், படக் குழுவினரையும் நிச்சயம் பாராட்டலாம்.
பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது. பின்னணி இசையிலும் நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார். டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் இருவரும் ஒளிப்பதிவை வெளிச்சமாக கொடுத்திருக்கிறார்கள்.
ஜிவி பெருமாள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பாரதிராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார். ஜி வி பெருமாள் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
சரீரம் – துணிச்சல்