அமைச்சர் பதவி வேண்டுமா? பணியில் மாறுதல் வேண்டுமா? மெடிக்கல் காலேஜ் சீட் வேண்டுமா? அரசியலில் மாற்றம் வேண்டுமா? இப்படி எதுவாக இருந்தாலும் மீடியேட்டர் கிட்டுவை அணுகினால் போதும், வேலை முடிந்து விடும். அந்த கிட்டு வேறு யாருமல்ல; விஜய் ஆண்டனி தான்! ஆனால், இவர் தான் மீடியேட்டர் என்பது வெளியே யாருக்கும் தெரியாது. வெளி உலகத்திற்கு காட்டன் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக செல் முருகன் உதவியாளராக இருக்கிறார். நாயகி விஜய் ஆண்டனியிடம் வேலை கேட்டு வருகிறார். அவரும் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார், அதோடு அவரைத் திருமணமும் செய்துக் கொள்கிறார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் ஜப்பான் கம்பெனி வரப் போகுது. அந்த நிலத்தை என் பெயருக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதறகாக பல லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கி கொண்டு அழகாக காய் நகர்த்தி கச்சிதமாக செய்து முடிக்கிறார் விஜய் ஆண்டனி. பெரிய கம்பெனியின் முதலாளியும் மத்தியில் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரான சுனில் கிர்பழனியிடம் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், சுனிலின் தங்கை கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக அவரை கொலை செய்கிறார். அவர் நடத்திய அரசியல் நாடகத்தை சுனில் அறிந்ததும் சிறப்பு காவல்துறை படையின் மூலம் விஜய் ஆண்டனியை கண்டுப்பிடித்து கைது செய்கிறது காவல்துறை.
விசாரணையில் இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல, 12 வருடமாக இந்தியா முழுவதும் அவர் அண்டர் கிரௌண்டில் இது போல் பல வேலைகளை பல துறைகளில் செய்திருக்கிறார் மற்றும் அதன் மூலம் ஆறாயிரத்து சொச்சம் கோடி கமிஷனாக வாங்கியது தெரிய வருகிறது.
விஜய் ஆண்டனி ஏன் இதை செய்தார்? கைதான விஜய் ஆண்டனி வெளியே வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
விஜய் ஆண்டனிக்கு மட்டுமல்ல, அவரின் ரசிகர்களுக்கும் இப்படம் டபுள் ட்ரீட் தான். விஜய் ஆண்டனி அமைதியாக மாஸ் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அசர வைத்திருக்கிறார். எந்த இடத்தில் அறிவை பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் ஆக்ஷனை கையில் எடுக்க வேண்டும் என்பதை உள்வாங்கி நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் இப்படம் முத்திரை பதிக்கும்.
நாயகி சராசரி பெண்ணாக அமைதியாக, அழகாக வந்து செல்கிறார். செல் முருகன் வித்தியாசமான பாத்திரத்தில் பதிகிறார்.
வாகை சந்திரசேகர் சில காட்சிகளில் வந்தாலும் படம் முழுவதும் நிறைகிறார். பெரியாரின் சிந்தனைகளை விதைத்து பெரியராகவே வாழ்ந்திருக்கிறார்.
400 வருடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்ததையும், இப்போது இருக்கும் அரசியலையும் இணைத்து அத்தனையும் இந்த ஒரு படத்திலேயே கொடுத்து விட்டார் அருண் பிரபு. இந்த கருவை மையமாக வைத்து இயக்கலாம் என்ற யோசனையில் யாராவது இருந்தால் இப்படத்தை ஒருமுறை பார்த்து விட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம். ஏனென்றால், அருண் பிரபு எதையும் மிச்சம் வைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத இயக்குனர்கள் வரிசையில் அருண் பிரபு இடம் பிடித்துவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார். அவர் ஹோம் வொர்க்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
இசை திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு சக்கரமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு கண்களுக்கு ஓய்வின்மையைத் தருகிறது.
வசனங்கள் அருமை, அதிலும் சந்திரசேகர் மற்றும் சுனிலின் வசனங்கள் யோசிக்கவும், கவனிக்கவும் வைத்திருக்கின்றன.
த்ரிபதி ரவீந்திரா, கிரண் குமார், ஷேபா விஸ்வநாத், ரினி, ரியா ஜித்து, மாஸ்டர் கேசவ் என அனைவரும் அவரவர் பணிகளைச் சிறப்பாக செய்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார்கள்.
ஷெல்லே ஆர் காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்து தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு தரமான படைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
சக்தித் திருமகன் – வெற்றி வாகைச் சூடிய மகன்