தணல் – திரை விமர்சனம் 3/5

போலீஸ் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர செல்கிறார் நாயகன் அதர்வா. அவருடன் அப்பாயிண்ட்ன்மெண்ட் ஆர்டரை பெற்று பணியில் சேர, மேலும் வருகின்றனர். காவல் நிலையத்தில் காலை முதல் மாலை வரை இவர்கள் ஆறு பேரும் காத்திருக்கின்றனர். கடைசியாக, போலீஸ் அதிகாரி ஒருவர், ஆறு பேரையும் ரவுண்ட்ஸ் போகுமாறு சொல்கிறார். இவர்களும் செல்கின்றனர். அப்போது, பாதாள சாக்கடை மூடியினைத் திறந்து ஒருவர், இவர்களைக் கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார். அவரை சந்தேகப்படும் அதர்வா உட்பட ஆறு பேரும், அவரை துரத்திக் கொண்டுச் செல்கின்றனர். ஒரு மிகப்பெரும் மதிலை தாண்டி அவர் ஓட, ஆறு பேரும் அந்த மதிலை தாண்டுகின்றனர். உள்ளே சென்றதும், துரத்தி வந்த ஆள் மறைந்துவிடுகிறார். குடிசை வாழ் பகுதியான அதில் ஒருவர் கூட இல்லை. எது வாசல் எது முடிவு என்று தெரியாமல் ஆறு பேரும் திகைத்து நிற்கின்றனர்.

அப்போது, அங்கு அஸ்வின் உட்பட மூன்று பேர் நிற்க, அவர் யார் என்று விசாரிக்க அருகில் செல்கிறார் போலீஸ் தரணி. பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின் தன் கையில் மறைத்து வைத்திருந்த மிகப்பெரும் கத்தியை எடுத்து தரணியைக் கொன்று விடுகிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியாகிறார் அதர்வா. போலீஸ் ஐந்து பேரையும் சுற்றுப்   போடுகிறது ஒரு கும்பல்.

இந்த கும்பலின் நோக்கம் தான் என்ன? எதற்காக இந்த கொலை வெறி தாக்குதல் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அதர்வா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். இருப்பினும் ஒரு சில காட்சிகளில் சற்று அதிகமாக நடிப்பை கொடுத்தது போல் இருந்தது. காதல் காட்சிகளில் ஜொலிக்கிறார் அதர்வா.

அஸ்வினை வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று தான் சொல்ல வேண்டும். இவரைக் கண்டாலே படம் பார்ப்பவர்களுக்கு பயம் வர வைக்கும் அளவிற்கு ஒரு வில்லத்தனத்தைக் கொடுத்து தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நாயகி லாவண்யா, காட்சிகளை தனது அழகால் அழகுப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்த மற்ற அனைவரும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாகச் சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில், அஸ்வினின் ப்ளாஷ் பேக் காட்சிகள் கண்களை குளமாக்கி விடுகிறது. இன்றளவும் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தைப் பற்றி திரையில் பறைசாற்றியிருக்கிறார் இயக்குனர். விவசாயம் எதனால் அழிந்தது என்பதையும் அவர் கூற தவறவில்லை.

ஆனால், சற்று தடுமாறாமல் கதையை கொண்டு சென்றிருக்கலாம் இயக்குனர் ரவீந்திர மாதவா. வங்கிகளை மாணவர்கள் கொள்ளையடிப்பது, அவர்களின் கைகளில் துப்பாக்கி, காவல்துறை தான் முதல் எதிரி என்று முன்னிறுத்துவது உள்ளிட்ட பல காட்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் படத்தின் ஊடே பயணிப்பது சிக்கலாகிறது.

ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கலாம். ஆனால், பின்னணி இசையில் நன்றாகவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஜஸ்டீன் பிரபாகரன்.

ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் சக்தி சரவணன். ஜான் பீட்டர் தயாரித்திருக்கிறார்.

தணல் – பற்றியிருந்தால் நன்றாக இருக்கும்