மாயக்கூத்து – திரை விமர்சனம் 4/5

வித்தியாசமான கதை களம்.

ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அவர் எழுதும் கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் வெளியே வந்து இவரிடம் கேள்வி கேட்டு பேசினால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் மாயக்கூத்து.

இருக்கையை விட்டு திரைக்குள் பயணிக்கும் பல படங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்த படம் இருந்தாலும், பார்வையாளர்களை எழுத்தாளராக உணர வைக்கிறது. மு. ரா.வின் கதாபாத்திரம் படைப்பாளிகளின் சமூக பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற வசனங்களை யதார்த்தமாக பேசி நடித்திருக்கிறார். நாகராஜன் கண்ணன் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவரை விலக்கி விட்டு அந்த இடத்தில் நாம் போகலாம் என்ற அளவிற்கு நாகராஜன் கண்ணனின் நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காயத்ரி அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். எழுத்தாளர் கணவனின் நடவடிக்கைகளைப் பதட்டப் படாமல் கேஷுவலான நடிப்பு அனைவரையும் கவரும். டெல்லி கணேஷ் யதார்த்தமாக ஸ்கோர் செய்கிறார். சாய் தீனா ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசிக்க வைக்கிறார்.

மேலும், ரேகா குமணன், ஐஸ்வர்யா ரகுபதி, முருகன் கோவிந்தசாமி, பரமேஸ்வரன் அனைவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் A. R. ராகவேந்திரா கதையையும், திரைக்கதையையும் சிறப்பாக எழுதி, புத்திசாலித்தனமாக இயக்கியிருக்கிறார். M. ஸ்ரீனிவாசனும் இயக்குனருடன் இணைந்து எழுதிருக்கிறார். அதை நன்றாக புரிந்து கொண்டு நாகூரான் ராமச்சந்திரன் தூணாக இருந்து படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இப்படத்தை இன்னும் உயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

அஞ்சனா ராஜகோபாலன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசை திரைக்குள் சென்று பயணிக்க உறுதுணையாக அமைந்திருக்கிறது. காட்சிக்கேற்ற உணர்வுகளை தன் இசையின் மூலம் அழகாக கடத்தியிருக்கிறார். பாராட்டுகள்.

மொத்தத்தில் இப்படம் சினிமாவை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. புதிய கோணத்தில் சினிமாவை எடுக்க நினைப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

ஆணவம் யாருக்கும் இருக்கக்கூடாது. அதிலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாளிகளுக்கு ஆணவம் இருக்கக் கூடாது என்கிற உயரிய கருத்தை கூறியது அருமை.

மாயக்கூத்து – அழகான மாயம் செய்கிறது