சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் மற்றும் பலரின் நடிப்பில் என் கிஷோர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவான படம் “மாயோன்”.
தொல்லியல் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கும் பழங்காலப் பொருட்களை வெளிநாட்டு சந்தையில் சட்ட விரோதமாக விற்கும் கும்பல். பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோவிலை ஆய்வு செய்ய கே எஸ் ரவிக்குமாரை தலைமையாக கொண்ட தொல்லியல் குழுவுடன் இனைந்து அங்குள்ள புதையலை திருட நினைக்கிறது.
புத்திசாலித்தனமும் சாதுர்யமும் கொண்ட கோயிலில் தொல்பொருள் ஆய்வாளர் குழு ஆய்வு தேடலில் இறங்குகிறது. புராணங்களில் பின்னப்பட்ட மர்மம் மற்றும் அறிவியலை அவிழ்த்துவிடுகிறது இக்குழு. பொறிகள், திருப்பங்கள் மற்றும் துரோகங்களை ஒவ்வொரு திருப்பத்திலும் சந்திக்கின்றன. அதன் பின் இக்குழு திருடப்பட்ட பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறதா அல்லது மாயோனின் மறைக்கப்பட்ட உண்மை இன்னும் மர்மமாக இருக்கிறதா? பழங்கால பொருட்களை கடத்தும் கும்பல் என்ன ஆனது? என்பது மீதிக்கதை…
சிபி சத்யராஜ் வழக்கம் போல் யதார்த்தமாக நடித்துள்ளார். கூடுதல் முயற்சி செய்து நடித்திருந்தால் படத்திற்கு கூடுதல் வலு சேர்ந்திருக்கும்.
தான்யா ரவிச்சந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கே எஸ் ரவிக்குமார், மாரிமுத்து, ராதாரவி பக்ஸ், ஹரிஷ் பேரிடி என அனைவரும் அவர்களின் அனுபவ நடிப்பை வழக்கம் போல் நடித்திருந்தது பாராட்டத்தக்கது.
இசைஞானியின்இசை அவரின் வழக்கமான இசையில் இருந்து சற்று மாறுபட்டே இருந்தது. சுமார் ரகம் என்றே சொல்லலாம்.
ராம் பிரசாத் ஒளிப்பதிவில் இயக்குனரின் கற்பனையை நிஜமாக்குவதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது அனைத்து காட்சிகளிலும் வெளிப்படையாக தெரியும். ஆனால், அந்த சிரமம் சில இடங்களில் மட்டுமே கைகொடுத்துள்ளது.
கலை இயக்குனர் பால சுப்ரமணியம் செய்திருக்கும் வேலை பிரமிக்க வைக்கும் வகையறா.
என் கிஷோர் தேர்ந்தெடுத்த கதைக்களம் மிக வலுவானதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒன்றும் கூட. இப்படி பட்ட கதையை தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு தனி பாராட்டுக்கள். அவர் கதை சொல்ல ஆரம்பித்த விதம், அவர் கற்பனை செய்த விதம் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும். திரைக்கதை சொதப்பலாகவே இருந்தது.
மாயோன் – தமிழனின் அறிவையும் ஆற்றலையும் பேசும் கதை