‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற வித்தியாசமான உத்தியை கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள்.
திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் ‘குத்துக்கு பத்து’. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ‘நவம்பர் ஸ்டோரீஸ்’ புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த தொடரை டி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.
‘குத்துக்குப் பத்து’ குறித்து இயக்குநர் பேசுகையில்,” காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத் தொடர் ‘ஆஹா’ ஒரிஜினல் படைப்பாக வெளியாவதில் எங்கள் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சி.” என்றார்.
ஆஹா ஒரிஜினல் படைப்பாக வெளியாகவிருக்கும் ‘குத்துக்கு பத்து’ தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தத் தொடரை பிரபலப்படுத்துவதற்காக படக்குழுவினர் ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு..’ என்ற வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மக்களுக்கு அறிமுகமான கூரியர் பாய், டெலிவரி பாய்.. போன்ற தோற்றத்தில் படக்குழுவினர் பயணித்து, பிரபலங்களைச் சந்தித்து, அவர்களின் முகத்தில் செல்லமாகவும், அன்பாகவும் குத்து விடுகிறார்கள். எதிர்பாராத தருணத்தில் நிகழும் இது குறித்து அவர்கள் வினா எழுப்பும் போது, ‘குத்துக்கு பத்து’ என்று முத்தாய்ப்பாக பேசி, தொடர் குறித்து ஆர்வத்தை தூண்டுகிறார்கள். டெம்பிள் மங்கீஸின் இந்த விளம்பர உத்திக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆஹா ஒரிஜினல்ஸ் வணிகப்பிரிவு தலைவர் சிதம்பரம் பேசுகையில்,“டெம்பிள் மங்கீஸ் போன்ற உள்ளுர் திறமையாளர்களுடன், ஆஹா இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களைப் போலவே நக்கலாட்டீஸ் என்ற குழுவினருடனும் இணைந்து ‘அம்முச்சி 2’ என்ற வலைத்தளத் தொடரை தயாரித்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் தொடர்ந்து தமிழின் பிரத்யேக இளந்திறமையாளர்களுடன் ஆஹா இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம். அத்துடன் பார்வையாளர்களின் இதயங்களை வருடும் கதைகளை வழங்குவதற்கான எங்களின் தேடலும் தொடர்கிறது.” என்றார்.
தமிழ் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ மற்றும் ஆஹா ஒரிஜினல்ஸ் ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படைப்புகள் வெளியானது. இதற்கு பார்வையாளர்களிடையே பெருகி வரும் வரவேற்பால், விரைவில் ‘ஐங்கரன்’ என்ற புதிய திரைப்படத்தையும் ஆஹா வெளியிடவிருக்கிறது.