“பினாமி” களுக்கு சீட் வழங்கினால்… அனல் தகிக்கும் அரக்கோணம் “தீட்சாபூமி” தீர்மானம்!
தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியாக மாறிப்போயிருக்கும் அரக்கோணம் தொகுதி பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதி.
இங்கே வேட்பாளராக நிற்கும் அனைவருமே பட்டியல் இனத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பலம் வாய்ந்த திமுக கோட்டையாக இருந்து வந்த அரக்கோணம் தனித் தொகுதி கடந்த 2 தேர்தல்களாக அதிமுக வசம் சென்றுவிட்டது.
இதற்கு காரணம் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட “வீக்” வேட்பாளர்களால்தான் என்கிறார்கள் அரக்கோணம் திமுக வரலாறை தெரிந்தவர்கள்.
அதிலும், குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதியில் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எந்த கட்சியும் சீட் கொடுப்பதை எப்போதும் அரக்கோணம் நகர பட்டியல் இன மக்கள் ஏற்பதே இல்லை.
ஏற்கனவே பட்டியல் இன மக்களுக்கும், வன்னிய இன மக்களுக்கும் பல கிராமங்களில் “ஏழாம் பொருத்தம்” . அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்து போலீஸ் புகார் ஊரடங்கு சிக்கல் என தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி எதிர் எதிர் முனைகளில் இருக்கும் இரு சமூகத்திலும் கலப்பு மணம் என்பது அரிதிலும் அரிது. அப்படியே செய்து கொண்டாலும் அவர்கள் சொந்த ஊரில் வசிக்க முடியாதபடி ஊர் கட்டுப்பாடு என எழுதப்படாத விதிகள் அவர்களை வெளியே தள்ளும்.
அரக்கோணம் உண்மை நிலவரம் இப்படி இருக்க கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் பவானி வடிவேலு.
இதில் பவானி பட்டியல் இனப் பெண். அவர் கணவர் வடிவேலு வன்னியர்.
கலப்புமணம் செய்து கொண்டிருக்கும் இவருக்கு சீட் அறிவிக்கப்பட்டதும் அரக்கோணம் தொகுதியே பரபரப்பாகி கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொகுதி திமுக நிர்வாகிகளே மாவட்டத்துக்கும், தலைமைக்கும் பகிரங்கமாகவே வேட்பாளரை மாற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்தனர்.
இதன் காரணமாக திமுக வரலாற்றிலேயே இல்லாத வழக்கமாக தலைமையால் அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தொகுதி நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக மாற்றியது திமுக தலைமை.
இந்த எதிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் சீட் அறிவிக்கப்பட்ட பவானி பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது கணவர் வடிவேலு வன்னியர். பெரும்பாலும் மனைவி கவுன்சிலர் என்றால் கணவர்தான் நகர் முழுதும் கவுன்சிலராக வலம் வருவார். அதே போலதான் ஊராட்சி மன்றங்களிலும் வீட்டுப் பெண்கள் வெற்றி பெற்றாலும் அவர்களின் கணவர்கள் தான் “ஆக்டிங்” தலைவர்களாக பணியாற்றுவார்கள்.
அதிலும் குறிப்பாக இப்படி கலப்பு மணம் செய்து கொண்டவர்களில் பெண் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்து கணவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த பெண் வெற்றி பெறும் பட்சத்தில் கணவர் தான் சார்ந்த சமூகத்தினருக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்வார் என்பதும், அதிலும் இதுபோல “ஏழாம் பொருத்தம்” உள்ள ஜோடிக்கு சீட் கிடைத்தால் என்ன மாதிரியான எதிர்ப்புகள் ஏற்படும் என்பதை கடந்த 2016 தேர்தலிலேயே அரக்கோணம் தொகுதி சந்தித்தது.
இந்த சூழலில், நடைபெற உள்ள தேர்தலில் பட்டியல் இனத்தை தவிர யாருக்கும் எந்த அரசியல் கட்சியும் சீட் ஒதுக்கக்கூடாது. வேட்பாளராக அறிவிக்கப்படும் கணவன்-மனைவி இருவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் எனபது உட்பட பல தீர்மானங்களை “தீட்சாபூமி” விழாக்குழு நிறைவேற்றி அனல் கக்கத் தொடங்கி விட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் தீட்சாபூமி விழா ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரக்கோணம் தொகுதியில் உள்ள அனைத்து பட்டியல் இன அமைப்புகளும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் அரக்கோணம் தொகுதியில் குறிப்பாக அரக்கோணம் தொகுதி திமுகவில் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது.
தீட்சாபூமி தீர்மானம் இதுதான் ” தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக கலப்பு திருமணம் செய்து கொண்ட பட்டியலின பெண்ணாக இருப்பின் அத் தொகுதியில் அந்த பெண் வேட்பாளரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பெண் வேட்பாளரின் கணவர் வேற்று இனத்தை சார்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அவர் அப்பெண் வேட்பாளரின் “பினாமி” ஆக செயல்பட்டு அத்தொகுதியில் வாழும் பட்டியல் இன மக்களின் நலனை தன்னுடைய சாதி உணர்வால் நிச்சயம் புறந்தள்ளிவிட வாய்ப்புகள் உண்டு. இது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு புறம்பானதாகும்” என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி அனல் கிளப்பும் தீர்மானங்களை ஏன் நிறைவேற்றினார்கள் என்று விசாரித்தால்… இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே திமுக தலைமைக்கு அரக்கோணம் தொகுதியின் உண்மை நிலையை இப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் என்றும், “கலப்புமணம்” புரிந்த பெண்ணுக்கு சீட் கொடுத்தால் கடந்த முறை ஏற்பட்ட அதே எதிர்ப்பு நிலை தொடர்கிறது என்பதை சொல்லவுமே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தொகுதி முழுக்க இப்படி அனல் கக்கும் எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில் எப்படியும் பட்டியல் இனத்தைச் சார்ந்த தன் மனைவி பவானிக்கு சீட் வாங்கும் முனைப்பில் ஓடிக்கொண்டிருக்கிறார் வன்னியர் ஆன கணவர் வடிவேலு.
தனக்கே சீட் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், தொகுதியில் வன்னியர்களாக உள்ள தனது தீவிர ஆதரவாளர்களை மட்டுமே அழைத்து ரகசிய கூட்டமும் நடத்தியிருக்கிறாராம் வடிவேலு.
இந்த விவகாரங்கள் தெரிந்ததும் தீட்சாபூமி விழாக் குழுவும், பல்வேறு பட்டியல் இன அமைப்புகளும் கடும் கொந்தளிப்பில் தேர்தல் ஆணையத்துக்கும், திமுக தலைமைக்கும் புகார் கடிதங்கள் அனுப்ப முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஆக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுபவதற்கு முன்பே அரக்கோணம் தொகுதியில் சமூகங்களுக்கு இடையிலான அனல் வீசத் தொடங்கி விட்டது.
தொடர்ந்து இரு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ரவிக்கு தொகுதி முழுதும் கடும் அதிருப்தி நிலவுகிறது. காரணம் அடிப்படை தேவைகளை கூட சரியாக நிறைவேற்றாமல் இருப்பதுதானாம். ஆனால் இந்த தீட்சாபூமி தீர்மானத்தால் எம்.எல்.ஏ.ரவி உள்ளுக்குள் குஷியாகி இருக்கிறாராம்.
கலப்பு மணம் செய்தவர்கள், செல்வாக்கு இல்லாத யாரையும் அறிவிக்காமல் பலம் வாய்ந்த வேட்பாளரை திமுக அறிவித்தால் மீண்டும் அரக்கோணம் திமுக கோட்டையாக மாறும்.