5 கிலோ இலவச அரிசி ரேஷன் கடைகளில் மே, ஜூனில் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாத பொருட்களுடன் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 26-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் ‘கரீப் கல்யாண்’ திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். அப்போது அவர், “அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தவிர கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து, பிரதமருடனான காணொலி காட்சி கூட்டத்தின் போதும், பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூடுதல் அரிசி, கோதுமை ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போதும் பிரதமரிடம் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த 5 கிலோ அரிசியை வழங்குவதற்காக கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய ரூ.84 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டமும் தமிழக அரசின் பொது விநியோக திட்டமும் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒருவருக்கு 5 கிலோ அரிசி, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே ஏப்ரல் மாதத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ அரிசியை ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாதங்களில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு ஏற்கெனவே இலவசமாக ஒரு கிலோ பருப்பு வழங்கி வருவதால் அதற்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் தொகை, கூடுதலாக வழங்கப்படும் இலவச அரிசிக்கு சரிகட்டப்படும். மேலும், அரிசிக்கு கூடுதலாக செலுத்தப்பட வேண்டிய ரூ.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.